மின்சாரப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், செம்பு மீதான இறக்குமதி வரியைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட மின்சாரப் பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத் தலைவர் சேகர், பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த 3 மாதங்களில் செம்புக் கம்பியின் விலை கிலோ ரூ.1,400-லிருந்து ரூ.2,100 வரை உயர்ந்துள்ளது. பிவிசி குழாய்கள், ஸ்விட்சுகள் உள்ளிட்ட மின்சாரப் பொருள்களின் விலையும் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. செம்பு, அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக மின்சாரப் பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இதனால் ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் விலை மேலும் 8 முதல் 10 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் பல கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. மேலும், ஏற்கெனவே முடிக்கப்பட்ட அரசுப் பணிகளுக்கான நிலுவைத் தொகை பல ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படவில்லை; கடந்த 3 மாதங்களாக புதிய டெண்டர்களும் வெளியாகவில்லை.
செம்பு மீதான இறக்குமதி வரியைக் குறைத்தால் எல்இடி பல்புகள் உள்ளிட்ட மின்சாரப் பொருள்களின் விலையைக் குறைக்க முடியும். இதன்மூலம் பொதுமக்கள் எல்இடி விளக்குகளுக்கு மாறி, மின்சார சேமிப்பையும் அதிகரிக்க இயலும்.
அதிக மதிப்பிலான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) வியாபாரிகளுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். கடுமையான சந்தைப் போட்டி காரணமாக வியாபாரிகளின் லாப வரம்பு (Profit Margin) ஏற்கெனவே மிகக் குறைவாகவே உள்ளது.
எனவே, இந்த கூடுதல் பரிவர்த்தனைக் கட்டண சுமையை வியாபாரிகள் மீது சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.